புது வருடத்தில் 10 உயிர்கள் பலி!

புது வருடத்தில் 10 உயிர்கள் பலி!

சித்திரை புத்தாண்டு தினமான நேற்று (14), நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய தினத்தில் அதிவேக வீதியில் மாத்திரம் 12 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 109 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்படி, நேற்றைய தினத்தில் மொத்தமாக 121 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 74 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் பதிவாகியுள்ளன. இதன்படி, 53 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 30 முச்சக்கரவண்டி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இன்றைய தினத்தில் வாகன விபத்துக்கள் அதிகளவில் பதிவாகலாம் எனவும், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அவதானிக்க முவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் 101 வாகன விபத்துக்கள் பதிவாகியிருந்தன. எனினும், இந்த ஆண்டு 120 ற்கும் அதிகமான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நேற்றைய தினத்தில் பதிவான வாகன விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட 33 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேரும், பட்டாசு விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட 4 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பட்டாசு விபத்தினால் ஒருவர் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவிக்கின்றது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.