ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா???

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா???

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைக்கேற்ப, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பேராயர் அறிவித்துள்ள கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு நாமும் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாகக் காணப்பட்டது.

தாக்குதல்களின் பின்னர் மக்கள் மத்தியில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியவர்கள் தற்போது முக்கிய அமைச்சுப்பதவியை வகிக்கின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவினால் தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை தடுக்க தவறியவர்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை.

தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களினதும், தாக்குதல்தாரிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களினதும் பிரதான எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது முக்கிய சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்பட என்பதேயாகும்.

எனினும் அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியுடன் இணைந்து இந்த அரசாங்கம் ஆட்சியமைத்திருக்கிறது.

அவ்வாறெனில் அரசாங்கத்தின் பங்காளி கட்சி உறுப்பினரான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே எமது கேள்வியாகும்.

அத்தோடு சஹரானுக்கு உதவியவர்கள் , தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகமும் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பேராயர் அறிவித்துள்ள கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு நாமும் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்.

கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்காக வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளமைக்கேற்ப சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடங்கள் கொழும்பிலும் உள்ளன.

அவ்வாறிருந்த போதிலும் இரணைதீவினை தெரிவு செய்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.