
இன, மத மற்றும் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்த, புதிய சட்டத் திருத்தத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன, மத மற்றும் சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கின்றவர்களை, வழக்கு விசாரணைகளின்றி 2 வருடங்கள் தடுத்து வைக்கக்கூடிய வகையிலான ஏற்பாடுகளுடன்கூடிய வர்த்தமானி அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த வர்த்தமானி மூலம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மோசமான சரத்துக்கள் அமுலாக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
$ads={1}
இலங்கையில் நிலவுகின்ற சமூக சமநிலையின்மை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை அமுல் ஆக்காமல் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கை எடுப்பது அதிருப்தி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத் திருத்தத்தின் ஊடாக இலகுவாக சிறுபான்மை சமூகங்கள் இலக்கு வைக்கப்பட்டு பாதிப்படைய செய்யகூடிய சூழ்நிலை அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.