இலங்கை தொடர்பாக ஜெனிவாவின் ஒரு தீர்மானம்; இரு பார்வைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை தொடர்பாக ஜெனிவாவின் ஒரு தீர்மானம்; இரு பார்வைகள்!


வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேசப் பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும் மூத்த இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார்.

தமிழர் அரசியலுடன் நன்கு பரிச்சயமுள்ளவர் இவர். 1988 இல் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை அமைந்தபோது, ஆட்சியைப் பிடித்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இவரையும் அந்த மாகாண சபையின் ஓர் அமைச்சராக நியமித்திருந்தது.

சில யதார்த்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டுகின்றார். அதையே அவர் இலங்கைக்கான எச்சரிக்கையாகத் தெரிவிக்க, அதே விடயத்தை இலங்கைக்கு சாதகமான அம்சமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டுகின்றார்.

தயான் ஜயதிலகவின் கருத்துப்படி -

இலங்கை விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்யும். 2022 செப்ரெம்பர் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பமாகாமல் தடுப்பதற்கு இலங்கைக்கு இன்னும் வாய்ப்புகள் உண்டு.

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி உலகம் ஏற்றுக் கொள்கின்றவர்களை நீதிபதிகளாக உள்ளடக்கி, ஒரு விசாரணைப் பொறிமுறையை ஸ்தாபித்து, தவறிழைத்தவர்களுக்குத் தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை விரைந்து செயற்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேசப் பொறிமுறை செயற்பட ஆரம்பித்து விடும். இலங்கை விவகாரம் ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் பொறிமுறை செயற்படவில்லை.

இலங்கை உரிய முறையில் செயற்படத் தவறினால் அந்தப் பொறிமுறை செயற்படத் தொடங்கி விடும். அது செயற்படத் தொடங்கினால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது என தயான் ஜயதிலக எச்சரித்திருக்கின்றார்.

அதாவது, இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், இனவழிப்பு நடவடிக்கைகள் குறித்து, நீதி முறையான விசாரணைகளை நடத்தி, உண்மைகளைக் கண்டறிந்து, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தி, பொறுப்புக் கூறலை நிலைநாட்டும் நடவடிக்கையை வெளிநாட்டுப் பொறிமுறையிடம் கையளிக்காமல், உள்ளகப் பொறிமுறை மூலம் அதை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு இன்னும் வாய்ப்புண்டு.

அதனை இலங்கை நேர்மையாக, உண்மையாக செய்யுமானால் சர்வதேச பொறிமுறை செயற்படுவதைத் தடுக்க முடியும் என்பதே தயான் ஜயதிலகவின் எச்சரிக்கை.

ஆனால், "பார்த்தீர்களா, இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கான விசாரணைப் பொறிமுறையை இலங்கை ஆரம்பிப்பதற்கு இப்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றிய தீர்மானத்தில் இடமளிக்கப்பட்டிருக்கின்றது.

குற்றமிழைத்த தரப்பைக் கொண்டே அந்தக் குற்றம் பற்றிய நீதி விசாரணையை நடத்தும்படி கோரும் கேலிக் கூத்தான தீர்மானமே ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இப்போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது'- என்று கூக்குரலிடுகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் பற்றிய விடயங்களை விசாரிப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஒரே விவகாரம் தொடர்பில் இரு வேறுபட்ட பிரமுகர்களின் பார்வை எப்படி உள்ளது என்பது நோக்கத்தக்கது.

இலங்கையின் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்களைச் சேமித்து, சாட்சியங்களைப் பதிந்து, ஆவணங்களை சேகரித்துச் செயற்படுத்துவதற்கு ஐ.நாவின் கண்காணிப்பில் மையம் ஒன்றுக்கும் இந்தத் தீர்மானம் வழி செய்துள்ளது.

$ads={1}

அவ்வாறான ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டால், யுத்தக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டோர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளில் அவர்களுக்கு எதிராக சர்வதேச நீதி நியாயாதிக்கத்தின் கீழ் குற்றவியல் விசாரணைகள் இடம்பெறும் ஆபத்து உண்டு.

அது மாத்திரமல்ல, இந்தத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கையில் முதலீடு, சுற்றுலாத்துறை போன்றவற்றில் சர்வதேச நாடுகளினால் இறுக்கமான போக்குக் கடைப்பிடிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் தயான் ஜயதிலக எச்சரிக்கின்றார்.

சர்வதேச ஊடாட்டங்களை கையாளும் தந்திரோபாயத்துக்குள்ளும் பெளத்த, சிங்களப் பேரினவாத வெறி அல்லது மேலாண்மைத் திமிர் புகுந்ததன் விளைவை நாடு சந்தித்தேயாக வேண்டியிருக்கும். இது தவிர்த்திருக்கக் கூடிய, இனி தவிர்க்க முடியாததாக மாறிவிட்ட வினை என்றார்.

-தமிழ்வின்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.