கொரோனா வைரஸ் சீனா - வுஹானின் ஆய்வுகூடத்தில் இருந்து வெளியாகவில்லை! உலக சுகாதார நிருணர்கள் தெரிவிப்பு!

கொரோனா வைரஸ் சீனா - வுஹானின் ஆய்வுகூடத்தில் இருந்து வெளியாகவில்லை! உலக சுகாதார நிருணர்கள் தெரிவிப்பு!


கொரோனா வைரஸானது சீனாவின் வுஹான் நகர ஆய்வுகூடத்திலிருந்து வெளியாகியிருக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.


கொரோனா வைரஸின் மூலத்தைக் கண்டறிவதற்காக சீனாவுக்குச் சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவினர், இவ்வைரஸ் மூலத்தை அடையாளம் காணவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ஆனால் வுஹான் நகர வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் என்ற கருதுகோளை மேற்படி நிபுணர்கள் மறுத்தனர்.


உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவினரும் சீன நிபுணர் குழுவொன்றும், இவ்வைரஸ் மூலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் எதையும் தெரிவிக்காமல் தமது ஆய்வுப் பயணத்தை முடித்துள்ளனர்.


2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸினால் உலகில் இதுவரை 23 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வுஹான் நகர வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து  கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் என சிலர் ஊகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இக்கருதுகோளை வலியுறுத்தி வந்தார்.


இவ்வைரஸ் மூலத்தைக் கண்டறிவதற்காக குழுவொன்று சீனாவின் வுஹான் நகருக்குச் சென்றது.


இக்குழுவினர் இன்று (09)  நடத்திய செய்தியாளர் மாநாட்டில், மேற்படி ஆய்வுகூட கருதுகோளை மேற்படி நிபுணர்கள் மறுத்தனர்.


அதேவேளை, இவ்வைரஸ் வெளவால்களிலிருந்து தோற்றியிருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், மற்றொரு முலையூட்டி இனத்தின் ஊடாக மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.


சீன ஆய்வுக்குழுவின் தலைவர் லியாங் வான்னியான் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலங்குகளிலிருந்து பரவலானது சாத்தியமான ஒரு வழியாக இருந்தபோதிலும், எந்த இனத்திலிருந்து மனிதர்களுக்கு இவ்வைரஸ் தொற்றியது என்பது அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது என்றார்.


உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பாரெக் கூறுகையில்,  “இவ்வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியமை தொடர்பான விளக்கத்தில், ஆய்வுகூட சம்பவம் தொடர்பான அனுமானம் அறுதியாக சாத்தியமற்றது. இதனால், எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு இந்த கருதுகோள் முன்வைக்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்தார்.


எந்த உயிரினத்திலிருந்து மனிதர்களுக்கு இவ்வைரஸ் தொற்றியது என்பதை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு பணியாக உள்ளது எனத் தெரிவித்தார்.


வுஹான் பிரதேசத்தில் வெளவால்கள் இல்லாததால், மனிதர்களுக்கு வெளவால்களிலிருந்து இவ்வைரஸ் நேரடியாக தொற்றியிருப்பதற்கான வாய்ப்பு அரிது எனத் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, 2019 டிசெம்பரில் முதலாவது கொரோனா நோயாளி பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் வுஹானில் பாரிய அளவில் கொரோனா வைரஸ் பரவியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை என்ற சீனாவின் நிலைப்பாட்டுக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.