தமிழ் பேசும் மக்களின் உரிமையை முஸ்லிம் தலைவர்கள் உணராவிட்டால், சிங்கள பேரினவாதம் இன்னும் முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கும்! -ITAK

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ் பேசும் மக்களின் உரிமையை முஸ்லிம் தலைவர்கள் உணராவிட்டால், சிங்கள பேரினவாதம் இன்னும் முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கும்! -ITAK

தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ் தேசிய தலைவர்கள் தந்தை செல்வா காலம் தொடக்கம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், தற்போதைய சம்மந்தன் ஐயா காலம் வரை இருந்தனர். ஆனால் அதை தட்டிக்கழித்தவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான ஹசன் அலி, தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு பயணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள செய்தி தொடர்பாக மேலும் கருத்து கூறிய பா. அரியநேத்திரன்,

$ads={2}

1949இல் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய தந்தை செல்வா வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதே ஒரே நோக்கம் என்ற கொள்கையில் உறுதியாய் செயல்பட்டார்.

வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுணைக்கும் சொல் தொடராக 'தமிழ் பேசும் மக்கள்' என்ற சொல்லை முதன் முதலில் தந்தை செல்வா உச்சரித்தார். அது இன்று வரையும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் என அழைக்கப்படுவதும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையின் சின்னமாகும் என்பதை கோடிட்டு காட்டியது.

இந்த அரசியல் பாரம்பரியத்தின் ஊடாகவே இலங்கை தமிழரசு கட்சியில் பல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுணைந்து செயல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் ,அரசியல் தலைவர்களாவும் தங்களுடைய முகவரிகளை தக்கவைத்தனர்.

1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலை கூட்டணி தந்தை செல்வா உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் நிறைவேற்றிய காலத்திலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மறைந்த அஷரப் மற்றும் சில தலைவர்கள் அதில் இணைந்து செயல்பட்டனர்.

அதன் பின்னரான காலப்பகுதியில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான காலத்திலும் முஸ்லிம் இளைஞர்கள், தமிழ் இளைஞர்களுடன் இணைந்து பல போராட்ட இயக்கங்களில் பங்குபற்றினர்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலிலும் ஏறக்குறைய 40 முஸ்லிம் இளைஞர்கள் இணைக்கப்பட்டனர். இலங்கை தமிழரசு கட்சியால் தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட்ட அனேகமான அகிம்சை ரீதியிலான போராட்டங்களிலும் முஸ்லிம் பெண்களும் பங்குபற்றினர்.

முதலாவது திருமலை மாநாட்டிலும் பல முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு கச்சேரியில் நடத்தப்பட்ட சத்தியாகிரகம் போராட்டத்திலும் முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர். இதுவெல்லாம் உண்மை வரலாறுகள்.

ஆனால் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பிரித்தாளும் தந்திரத்தை கொண்டு அடக்க நினைத்த இலங்கை பேரினவாத மாறி மாறி ஆட்சி செய்த அரசுகளின் திட்டத்திற்கு துணைபோன சில முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சுயநல அரசியல் போக்கால் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுடையே இருந்த புரிந்துணர்வும் ஒற்றுமையும் விரிசல் அடைந்தது.

$ads={2}

அதன் வெளிம்பாடு தான் 1990 காலத்தில் முஸ்லிம் இளைஞர்களை அரச படைகளில் இணைந்து தமிழ் தேசிய விடுதலை போராட்டத்திற்கு எதிராக ஊர்காவல் படை மற்றும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதன் வெளிப்பாடுகள் காரணமாக தமிழ் முஸ்லிம் மக்களுடையே வெறுப்புணர்வு தோற்றம் மேலோங்கியது. அதனால் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

ஆனால் 2004இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நானும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அப்போது செயலாளராக இருந்த ஹசன் அலி உட்பட முஸ்லிம் நாடாளுமன்ற குழுக்களுடன் பல தடவை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் ஐயா தலைமையில், நாங்கள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் என வலியுறுத்தி பல சந்திப்புக்களை நடத்தினோம்.

இதேபோல் வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும், முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் சந்தித்து தமிழ் முஸ்லிம் அரசியல் செயல்பாடுகள் பற்றியும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி எல்லாம் இணக்கப்பாடுகள் ஏற்பட்டன.

அது கூட இலங்கை அரசினால் முஸ்லிம் தலைவர்களை சரிவர செயல்படுத்தாமல் தடைபோடப்பட்டது.

தமிழ் முஸ்லிம் தலைவர்கள் இணைந்து செயல்படக்கூடாது என்பதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு சலுகைகளை வழங்கி தொடர்ச்சியான பிரித்தாளும் தந்திரத்தை இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டதன் வெறும் அமைச்சர் பதவிகளும், அபிவிருத்தி அரசியலுமே கொள்கை என முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நினைத்து சோரம் போனார்கள்.

அதன் பின்னரான உக்கிரமான போர் இலங்கைப் படைகளுக்கும், விடுதலைப்  புலிகளுக்கும் திருகோணமலை மாவிலையாற்றில் 2006ல் தொடங்கி முள்ளிவாய்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஈழ விடுதலை ஆயுதப்போராட்டம் 2009 மே 18ல் மௌனித்த பின்பு, இலங்கையில் பல இடங்களிலும் சிங்கள மக்கள் பால் சோறும் கட்டச்சம்பலும் கொடுத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்த போது வடக்கு கிழக்கில் உள்ள காத்தான்குடி, ஒட்டமாவடி, ஏறாவூர், கல்முனை, மருதமுனை, நிந்தவூர், பாலமுனை, பொத்துவில், மூதூர், மன்னார் என வடக்கு கிழக்கு எல்லா இடங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பல முஸ்லிம் மக்களும் வர்த்தகர்களும் இராணுவ வெற்றியை கொண்டாடினர்.

பட்டாசு கொழுத்தினர் பள்ளிவாசல்களில் கந்தூரி கொடுத்து ஆரவாரித்தனர். அப்போது வடக்கு கிழக்கு மக்கள் தமது உறவுகளை பலி கொடுத்து ஏங்கித்தவித்த காலம் நாங்கள் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை அவதானித்தோம். இணைந்து வாழ்ந்த தமிழ் முஸ்லிம் உறவுகளில் இந்த செயல் இன்னும் தமிழ் மக்களின் மனதில் கசப்புணர்வுகளை தோற்றுவித்தன.

விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னரான காலப்பகுதியில 2010 தொடக்கம் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சுயநிர்ணய அரசியல் தீர்வை பெறும் நோக்கில் தமிழ் முஸ்லிம் அரசியல் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும், அப்படியான ஒரு அரசியல் யாப்பு திருத்தமே உகந்தது என்ற கொள்கையை அடிப்படையாக பல தடவை நாம் வலியுறுத்தியுள்ளோம். இது எல்லாம் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை கூட தரம் உயர்த்துவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சுயலாப அரசியல் தானே காரணம் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

$ads={2}

தமிழ் முஸ்லிம் மக்களுல் ஒற்றுமைக்கு இப்போது தடையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலர் தடையாக இருப்பது எல்லோரும் அறிந்த விடயம்.

வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் பலமே முஸ்லிம் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கும் என்ற உண்மையை குறுகிய அரசில் லாபம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிந்தித்து உணர்ந்து இனியாவது ஆக்கபூர்வமாக செயல்பட்டால் மட்டுமே முஸ்லிம் மக்களின் இருப்பும், தமிழ் மக்களின் இருப்பும் வடக்கு கிழக்கில் பாதுகாப்புடன் உறுதிப்படுத்தப்படும். இதனை உணர்ந்து அந்த அடிப்படையில் தமிழ் தேசிய தலைவர்களுடன் பேசுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் முன்வர வேண்டும்.

அதை விட்டு அன்றாட பிரச்சினைகளுக்காக மட்டும் அல்லது கொரோனா மரணத்தில் மரணித்த உடலங்களை புதைப்பதற்கு மட்டும் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு நிரந்தர தீர்வாக அமையாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை உள்ளார்ந்தமாக முஸ்லிம் தலைவர்கள் உணராவிட்டால், சிங்கள பேரினவாதம் இன்னும் முஸ்லிம் மக்களை ஆட்டிப்படைக்கும் இதை முஸ்லிம் புத்தி ஜீவிகளும் உணர வேண்டும் எனவும் மேலும் கூறியுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.