ஜனாஸா எரிப்பு விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையிடம் முஸ்லிம்கள் விடுத்துள்ள கோரிக்கை!

ஜனாஸா எரிப்பு விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையிடம் முஸ்லிம்கள் விடுத்துள்ள கோரிக்கை!


கொரோனா நோயால் உயிரிழக்கும் அனைவரின் உடல்களும் எரிக்கப்படுகின்றமை சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக கண்டித்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தின் கொள்கையை மாற்றிக்கொள்ள வலியுறுத்த வேண்டுமென முஸ்லிம்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொழும்பு தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஒப்படைத்த கடிதத்தில், முஸ்லிம் இடதுசாரி முன்னணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.


கொரோனாவால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனைத் தடுப்பதாக, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரிடம், கையளித்த கடிதத்தில், முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் சுட்டிக்காட்டியுள்ளார்.


கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமிய மரணத்தின் நான்கு கட்டாயக் கொள்கைகளில் மூன்றைக் கைவிட்டுள்ளதாகவும், தாம் பின்பற்றக்கூடிய ஒரே உரிமையை அரசாங்கம் பறிப்பதாகவும் முஸ்லிம் இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.


முஸ்லிம்கள் உடலைக் கழுவுதல், துணியால் உடலை சுற்றுதல் மற்றும் ஒன்றாக பிரார்த்தித்தல் ஆகிய விடயங்களை கைவிட ஒப்புக் கொண்டுள்ளனர். அனைத்து அரசாங்க சுகாதார பரிந்துரைகளுக்கும் உட்பட்டு, பாதுகாப்பான அடக்கம் செய்வதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க உடலை அடக்கம் செய்ய அரசாங்கத்தின் அனுமதியை மாத்திரமே அவர்கள் கேட்கிறார்கள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post