
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் போலிச் செய்தியை வெளியிட்டார் என்ற சந்தேக்கில் கைது செய்யப்பட்டவர் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் போலியான செய்தியை இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
வானொலி அலைவரிசை ஒன்றின் உத்தியோகபூர்வ இலட்சினையை பயன்படுத்தி அந்த செய்தி பதிவேற்றப்பட்டிருந்தது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் இணைய பிரிவில் பணிபுரிந்து வருபவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை இன்று (27) புதன்கிழமை புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதுடன் அவருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது சரத்துக்கமையவும் , கனணி குற்றப்பிரிவு சட்டவிதிகளுக்கு கீழும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்த நீதிவான் நீதிவான் அவரை பெப்ரவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
-செ.தேன்மொழி