
ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத அமைப்பு நேரடியாக தொடர்புபடவில்லை என்பதும், தாக்குதலின் பின்னர் அதற்கான பொறுப்பை ஐ.ஸ் ஏற்பதற்கான நடவடிக்கைகளை 'மாத்தளை ஸஹ்ரான்' எனும் சந்தேக நபரே முன்னெடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தனது ஆலோசனைகளின் கீழ், சிஐடியின் டிஜிட்டல், கணினிக்குற்றம் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி, பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோரின் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது தெரிய வந்ததாக சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவின் கேள்விகளுக்கு பதிலளித்து சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.