
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குத்தகைக்கு விடவோ அல்லது விற்பனை செய்யவோபடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் நம்மை குற்றம் சுமத்த வேண்டியதில்லை எனவும், கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ திட்டமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு முனையம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், இந்த விடயம் தொழிற்சங்கங்களுக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையத்தை விற்பனை செய்வது அல்லது குத்தகைக்கு விடுவது குறித்து எந்தவொரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை கூட நடாத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதில்லை எனவும், தன்னிடம் கேட்டிருந்தால் உண்மை நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும், அமைச்சரவையின் பெரும்பான்மையினரும் சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொத்துக்களை விற்பனை செய்யும் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சியினுடையது எனவும், அந்தக் கொள்கை தமது அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


