இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை பொதுத்தன்மையினை பேணவில்லை! வாசுதேவ நாணயக்கார

இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை பொதுத்தன்மையினை பேணவில்லை! வாசுதேவ நாணயக்கார

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் இரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஆராய்வது அவசியமாகும். இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லை என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயற்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் உள்ள பொறிமுறையின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினை கையாள வகுக்கப்பட்ட திட்டங்களை 2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் செயற்படுத்தவில்லை.


மனித உரிமை பேரவை விவகாரம் கூட அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 30/1 பிரேரணைக்கு இணையனுசரணை வழங்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர அரச தலைவருக்கும் பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாகவே கருத வேண்டும். 


30/1 பிரேரணையில் உள்ளடக்கபட்ட விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை கூட்டத்தொடரின் போது 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக விலகியது.


இந்த தீர்மானத்தை அரசாங்கம் சுயாதீனமான முறையில் எடுத்தது. எதிர்வரும் பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர்  வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும். உள்ளக பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகிறார்கள். இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை என்றார்.


-இராஜதுரை ஹஷான்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.