திருப்பம் காண வேண்டிய ஊடகங்கள்; திசை மாறிச் செல்வதேன்?? எச். பாத்திமா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருப்பம் காண வேண்டிய ஊடகங்கள்; திசை மாறிச் செல்வதேன்?? எச். பாத்திமா


மனிதனானவன் வீரநடை நடந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டில், தொடர்பாடல் யுகத்தில் ‘ஊடகத்துறை’ என்பது ஓர் இன்றியமையாத விடயமாக அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இன்று ஊடகத்துறையானது உலகை தனது விரல் நுனியில் வைத்து சுழற்றுகின்றது. ஊடகத்துறையின் செயல்திறன்  மற்றும் நிலைப்பாடானது மக்கள் மற்றும் ஊடகத்துறையில் மக்களின் ஈடுப்பாட்டிலேயே தங்கியுள்ளது என்பது மிகையில்லை. பொதுசன அபிப்பிராயத்தை ஏற்படுத்தலே ஊடகங்களின் தலையாய கடமையாகும். அதாவது அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கும், பொதுமக்களின் தேவைகளை அரசுக்கும் அறிவிப்பதில் ஒரு பாலமாக நின்று செயற்படுதலேயே ஊடகத்துறை மேற்கொள்கின்றது.


 மேலும் விரிவாக கூறுவோமேயானால் மக்களிடத்தில், குரலற்ற மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதே ஊடகத்துறையின் பங்காகும் என்பது இன்றியமையாத ஒன்றாகும். இதன் காரணமாகவே ஊடகத்துறையினை சில அறிஞர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வரையறுக்கின்றனர்.


$ads={2}


நாம் வாழும் இலங்கை நாட்டிலும் ஊடகத்துறையின் செல்வாக்கானது ஓர் ஆணிவேரைப்போல் படர்ந்துள்ளது  கண்கூடாகும். 


இந்தவகையில் இவ்வுலகில் ‘மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது’ என்ற கூற்றிற்கிணங்க நாம் வாழும் இலங்கை நாட்டிலும் அனைத்து துறைகளை போன்று ஊடகத்துறையும் பல புதிய திருப்பங்களுடனும், தொழிநுட்ப மாற்றங்களுடனும் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது என்றால் தவறில்லை. இன்று அச்சு ஊடகமான பத்திரிகைகளின் வளர்ச்சி, மற்றும் முன்னேற்றம் தலையோங்கி காணப்படினும் அவற்றை எல்லாம் தாண்டி வானொலியின் பரவலானது தொலைக்காட்சி பெட்டியின் தேவையையும் தாண்டி ஒவ்வொரு ஏழை தோட்டத்தொழிலாளியின் வீடு வரையும் வியாபித்துள்ளது.


எனினும் கேள்விக்கிடமான விடயம் யாதெனில் எமது நாட்டில் ஊடகத்துறையானது சரியான, நடுநிலைமையான இடத்தில் இருந்து தமது கருத்துக்களை பரிமாறுகின்றதா? என்பதாகும். நிச்சயமாக ஊடகத்துறையானது தனது நடுநிலைமை பேணி தகவல்கள் வெளியிட தவறவிடுகின்றன. இதற்கான காரணம் யாதெனில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்களை குறிப்பார்க்கும் அம்பாக ஊடகத்துறையினை பயன்படுத்துவதே ஆகும். இதனாலேயே இலங்கையில் சிறுபான்மை மக்களிற்கு சார்பாக இருக்கக்கூடிய அரச ஊடகங்களான தொலைக்காட்சி அலைவரிசையாக இருக்கட்டும், வானொலி அலைவரிசைகளாக இருக்கட்டும், பத்திரிகைகளாக இருக்கட்டும், இவை அனைத்தும் சுயாதீனமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


இந்தவகையில் நோக்கும் போது நம் மனக்கண் முன் முதலில் வருவது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையாகும். ஜனநாயகத்தை மெச்சும் நவயுகத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் பங்கானது இன்றியமையாத ஒன்றாக காணப்பட வேண்டிய காலக்கட்டத்தில், இச்சேவையானது திசைமாறிச் செல்வதேன்? என்பது ஒவ்வொரு சிருபான்மை இன தனிமனிதனதும் கேள்வி என்றால் தவறாகாது.


ஆம்!, நிச்சயமாக இக்கேள்விக்கு விடைக்காண்பதற்கு முன் நாம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தோற்றத்தை அறிந்திருப்பது அவசியமாகும்.


இதன் ஆரம்ப கர்த்தாவாக திகழ்பவர் மர்ஹூம் அல்லாமா கலாநிதி. எம்.எம். உவைஸ் அவர்களாவார். இவர் 1952ஆம் ஆண்டில் அக்காலத்தில் வானொலிச் சேவையின், சிங்கள பணிப்பாளராக சேவையாற்றிக்கொண்டிருந்த வேர்னன் அபேசேகரவின் துணையுடன் முஸ்லிம்களுக்கான செய்தி அறிக்கையாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினை ஆரம்பித்தார்.


ஆரம்ப காலக்கட்டத்தில் முஸ்லிம் சேவையானது ஐந்து நிமிட செய்தி அறிக்கையாக ஆரம்பிக்கப்பட்டு பின் பதினைந்து நிமிடமாக மாறி, பின் பதினைந்து நிமிடங்கள் அரைமணித்தியாலம் என்று தமிழ் தேசிய சேவையின் வசதிக்கமைவாக முஸ்லிம் நிகழ்ச்சி என்ற பெயரில் படிப்படியாக வெற்றிக்கம்பம் நோக்கி வளர்ச்சியடைந்தது. இதனை தொடர்ந்து 1954ஆம் ஆண்டு நிரந்தர மற்றும் முஸ்லிம் நிகழ்ச்சிக்கென தனி பொறுப்பாசிரியராக மர்ஹூம் ஏ.எம்.காமில் அவர்கள் பொறுப்பேற்றதுடன் முஸ்லிம் சேவையானது மேலும் உத்வேகத்துடன் ஒலிபரப்பானது. இவ்வாறு வளர்ச்சியடைந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் ஒரு திருப்பு முனையாக அமைந்தது, 1956ஆம் ஆண்டில் வானொலிக்கு பொறுப்பான அமைச்சராக மர்ஹூம் கலாநிதி. பதியுதீன் மஹ்மூத் நியமிக்கப்பட்டதுடன் அவரினால் முஸ்லிம் சேவையானது இரவு  எட்டு மணி முதல் ஒன்பது மணிவரையான சேவையாக மாறியதாகும். இவ்வாறு பல காலக்கட்டங்களில் பல்வேறு நியமனங்களுடன் பல்வேறு வகையில் வளர்ச்சி முகம் கண்டது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை.


$ads={2}


இதனையடுத்து 1980ஆம் ஆண்டில், முஸ்லிம் சேவையில் நியமனம் பெற்ற  எம். இஸட். அஹமத் முனவ்வர் என்பவர் ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் பல பதவிகள் வகுத்து படிப்படியாக மக்கள் மத்திக்கு முஸ்லிம் சேவையினை எடுத்துச் சென்றார். இவ்வாறு பல  திருப்பங்களுடன் வளர்ச்சியடைந்து வந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம்  சேவையின் பிரதான மைல்கல்லாக அமைந்தது  இணைய வானொலி சேவையின் ஆரம்பமாகும். இதன் மூலம் இலங்கை வாழ் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் 24 மணி நேரமும் நன்மையடைய வேண்டும் என்பதே இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் அவாவாக காணப்பட்டது.


அத்தோடு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையானது ஆரம்பந்தொட்டு ஆற்றி வந்த சேவைகள் எண்ணிலடங்காதவைகளாகும். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை, பாமரர்கள் முதல் படித்தோர் வரை கேட்டு மகிழக்கூடிய, பயன்பெறும் பல நிகழ்ச்சிகளை மக்கள் மனதில் நிலைப்பெற வைத்த பெருமை முஸ்லிம் சேவையை சாரும் என்றால் தவறில்லை. புனித ரமழான் மாத காலத்தில் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகள், படிப்பறிவூட்டக்கூடிய இஸ்லாமிய கல்வி நிகழ்ச்சிகள், செய்தி அறிக்கைகள், உலமாக்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் என எண்ணிலடங்காத பல நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை எமக்கு தொகுத்து வழங்கியுள்ளது.


இவ்வாறு சமூகத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய, ஓர் உன்னத தொண்டராக காணப்படும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தற்போதைய நிலை என்ன..?  திருப்பங்கள் காண வேண்டிய சூழ்நிலையில் திசைதிரும்புகின்றதா முஸ்லிம் சேவை..?


ஆம்!, இவ்வாறான கேள்விகள் இன்றைய காலக்கட்டத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் பரவலாக எழக்கூடிய பொதுவான கேள்விகளே ஆகும் . இதற்கான காரணம் என்னவெனில் சிறுப்பான்மையினருக்காக குரல் கொடுக்கக்கூடிய எமது உரிமைகளில் ஒன்றான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் மீது மேற்கொள்ளும் அரசியல் சார்பான நியதிகள் மற்றும் கொள்கை சார்பான வாதங்களின் தாக்கமே என்பது தெளிவாகும்.


இதனாலேயே இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையானது ஒவ்வொறு காலகட்டத்திலும் இவ்வாறான கொள்கைகளின் ஊடுறுவலின் காரணமாக வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகளையே தொகுத்து வழங்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான காரணங்களின் தாக்கத்தின் காரணமாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையானது தனது  சுயாதீன தன்மையை இழந்து வருகின்றதுடன் தொடர்ந்தும் அதன் தன்னிச்சையாக செயற்படும் நடுநிலைமை பேணும் பண்பு பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதன் மூலம் நாம் எமக்கென எமக்காக காணப்படும் ஊடகங்களை இழக்கும் பரிதாப நிலை ஏற்படுவதில் ஐயமில்லை.


 மேலும் நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களுக்காகவும் சரி, ஏனைய சிறுப்பான்மையினருக்காவும் சரி அவர்களுக்கென பகிரங்கமாக குரல் கொடுக்கும் பல நிகழ்ச்சிகள்  ஊடகங்களில் ஒலிபரப்பாகின்றன. இவற்றின் மூலம் அம்மக்களின் பிரச்சினைகள் சமூகத்திற்கு முன் கொண்டுவரப்படுகின்றதோடு அவற்றிற்கான தீர்வுகளும் கிடைக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். எனினும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முறையீடுகளை பகிரங்கப்படுத்துவதில் எமக்காக காணப்படும் ஊடகங்கள் அமைதி பேணும் போக்கே காணப்படுகின்றது. இது கவலைக்கிடமான ஓர் விடயமாகும். இப்போக்கே முஸ்லிம் சேவையினூடாகவும் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே எமக்காக எமது மக்களின் சார்பாக ஒலிக்கும் குரலாக முஸ்லிம் சேவை ஒலிக்குமேயானால் சிறுபான்மையினரான எமது உரிமைகளும் நிச்சயமாக  பாதுகாக்கப்படுவதோடு முன்கொண்டுவரப்படும்.


அரசியல் மற்றும் கொள்கை வாதங்களின் தாக்கங்களின் காரணமாக பொதுசன அபிப்பிராயம் மறுக்கப்படுவதுடன் நிறுவன ரீதியான மற்றும் கொள்கைகள் ரீதியான அபிப்ராயங்களே அண்மைய காலக்கட்டத்தில் ஊடகங்களில் ஒலிபரப்பாகின்றன. இங்கு மக்கள் பிரச்சினைகள் எடுத்துறைக்கப்படுவதில்லை, மாறாக மறுக்கப்படுகின்றன. இது சிறுபான்மை மக்கள் எதிர் நோக்கும் பாரிய சவாலாகும். இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கான ஒரே வழி ஊடக சுயாதீன தன்மை ஆகும். அரச கொள்கைகள் மற்றும் வாதக்கொள்கைகள் எவ்வகையில் எக்காலத்தில் மாறுப்பட்டாலும் முஸ்லிம் சேவையானது உறுதியாக தனது சுயாதீன தன்மையை இழக்காது செயற்படும் வகையில் அதன் ஆவண உரிமைகள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் வேளையில் பொதுசன அபிப்ராயங்கள் பாதுகாக்கப்படுவதோடு முஸ்லிம் சேவையின் சுயாதீனத்தன்மையும் பாதுகாக்கப்படும்.


மேலும் சேவையானது திசை திரும்புவதில் தாக்கம் செலுத்தும் ஓர் காரணியாக ஊடக ஒழுக்கவியல் நெறிமுறைகளை சரியான முறையில்  பின்பற்றப்படாமையையும் குறிப்பிடலாம். எத்துறையாயினும் ஒழுக்கவியல் நெறிமுறைகள் அவசியமானதாக காணப்படுகின்றன. அவ்வகையில் முக்கியமாக ஊடகத்துறையானது நாடு மற்றும் நாட்டு மக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓர் துறையாக இருப்பதனால் ஒழுக்கவியல் நெறிமுறைகள் இங்கு அத்தியவசியமான ஒன்றாக காணப்படுகின்றன. எனவே ஒழுக்கவியல் நெறிமுறைகளை பின்பற்றுதலையும் இப்பிரச்சினைக்கான தீர்வாக நாம் முன்வைக்கலாம்.


$ads={2}


அதுமட்டுமா? இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை எதிர்நோக்கும் மற்றொரு பாரிய சவாலாக, வேறு அலைவரிசைகளின் மூலம் ஒலிபரப்பாகும் சில நிகழ்சிகளையும் குறிப்பிடலாம். சில வானொலி  அலைவரிசைகளின் மூலம் காலை முதல் மாலை வரை நீயும் நானும், காதல் கதைகள், கதை பேசும் காதல், என புனைப்பெயர்கள் கொண்டு காதலை அடிப்படையாக கொண்டு காதல் இன்றி வாழ்வில்லை என்ற அளவில் சமூகத்தை வழிக்கெடுக்கும் பல நிகழ்ச்சிகள் மூலம் சிறுவர்கள் முதல் பெரியார்கள் வரை பாவச் சிறையினுள் அடைக்கும் நிகழ்ச்சிகளும் இசைகளும் திருப்பங்கள் காண வேண்டிய இடத்தில், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினை திசைதிருப்புவதற்கான காரணமாக அமைந்துள்ளன. ஏனெனில் இவற்றின் செயற்பாடுகளின் தாக்கத்தின் காரணமாக சமூகத்தில் முஸ்லிம் சேவையின் நோக்கு பாதிக்கப்படுகின்றது. மக்களின் ஈடுபாடு இவ்வாறான நிகழ்ச்சிகளின் மீது காணப்படும் போது  முஸ்லிம் சேவையின் மூலம் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளின் கேள்வி குறைவடைந்து செல்லும் போக்கை அவதானிக்க கூடியதாக உள்ளது.


இவ்வாறு மேலே குறிப்பிட்ட வகையில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் திசைதிருப்பத்திற்கான காரணிகளை நாம் வகுத்தறியக்கூடியதாக உள்ளதுடன் அவற்றில் இருந்து மீண்டெழ வேண்டிய கடமைப்பாட்டினை கொண்டவர்களாகவும் நாம் காணப்படுகின்றோம். எனவே, தனது அளப்பரிய சமூக சேவையில் வைரவிழாவையும் தாண்டி தனது வளர்ச்சி பாதையில் வீர நடைபோட்டுக்கொண்டிருக்கும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் ஒவ்வொறு சவாலிற்கும் அதன் ஒவ்வொறு இலட்சியத்திற்கும், சிறுபான்மை மக்களாகிய அனைவரும் கூட்டாக இணைந்து செயற்படுவோமாக! 


எனவே ஊடகங்கள் தனக்கான தார்மீக வழியில் நின்று செயலாற்ற வேண்டும் என்பது இதன் மூலம் வழியுறுத்தப்படுகின்றது.


ஆக்கம்: எச். பாத்திமா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.