
நேற்று (30) வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம்.
இலங்கையைப் பொறுத்த வரையில் இன்று வரைக்கும் கிட்டத்தட்ட 4,000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதில் 11 பேர் இறந்துள்ளனர். 17 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் வவுனியாவில் 06 ஆண்களும் 05 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுவாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்ற போது தொற்றுகிறது. 2020ஆம் ஆண்டு ஆண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். அவருக்கு ஒரினச் சேர்க்கையால் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இளைஞர்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் வேகமானதாக பரவக் கூடிய அபாய நிலையும் உள்ளது.
அதேபோல் நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போதும் கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.
வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதுவே, இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது.
ஆகவே, இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியாதவர்களுடன் இருக்கும் போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்க கூடாது.
வவுனியாவில் இருக்கக்கூடிய 36 பெண் பாலியல் தொழிலாளர்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. என்றாலும் அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.
ஆகவே, முற்றுமுழுதாக இலங்கையில் இருந்து எயிட்ஸ் தொற்றினை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை HIV பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனையாக இருக்கிறது.
இந்த கொரோனா காலத்தில் விழிப்புணர்வுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதால் ஊடகங்கள் ஊடாக இதனைச் செய்ய விரும்புகிறோம்.
2025 ஆம் ஆண்டிற்குள் முற்றுமுழுதாக HIV தொற்றை இல்லாமற் செய்வதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘HIV தடுப்பு இளைஞர்களின் பொறுப்பு’ என்னும் தொனிப் பொருளில் அனுஸ்டிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த வருடத்தைப் பொறுத்த வரைக்கும் இளைஞர் மத்தியில் தான் இந்த தொற்று அதிகமாக காணப்படுகிறது.
ஆகவே, இளைஞர்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவக் கூடிய அபாய நிலையும் உள்ளது எனத் தெரிவித்தார்.