
அந்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
புதிய ஆரம்பத்தோடு பல புதிய எதிர்பார்ப்புக்களோடு நாம் இன்னுமொரு வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்நிலையில், நாம் விட்டுச்செல்லும் ஆண்டின் செயற்பாடுகளையும் அது பிரதிபலிக்க வேண்டும். அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளரும் இயற்கையியலாளருமான ஹால் போர்லாண்ட் ஒருமுறை கூறியது போல், "ஒரு வருடத்தின் முடிவு ஒரு முடிவு அல்லது ஆரம்பம் அல்ல. மாற்றமாகப் பெற்ற அனுபவங்களுடன் சீரிய நோக்குடனும், விவேகத்துடனும் பயணத்தைத் தொடர்வதாகும்" கடந்துபோன 2020 ஆம் ஆண்டு நிச்சயமாக எங்களுக்கு பல புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து புதிய பாடங்களைக் கற்றுத் தந்தது . "ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழ்வு" என்ற எண்ணக்கரு மற்றும் அதற்கான நடைமுறைகள் அடிப்படையில், சவால் மிக்கதாகவே காணப்படுகின்றன.
$ads={2}
இதன் நன்மைகளென நாம் கருதும் போது, அதிகமான மக்கள் கிடைக்கக்கூடிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் கற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் நாடு முழுவதும் எமது வை.எம்.எம்.ஏ. பேரவை மற்றும் எங்களது அங்கத்துவ (YMMA) அமைப்புக்கள் செய்த பணிகள் குறித்து, நான் மிகவும் பெருமைப்படுகின்றேன் . முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உலர் உணவு விநியோகம், கொவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் செயற்பட்டுவரும் சுகாதார அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு உபகரணங்களை நன்கொடை அளித்தல் மற்றும் இந்தத் தொற்று நோய்களின் போது, இரத்த வங்கிகளுக்கு மிகவும் தேவையான இரத்தத்தை வழங்க இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தல் போன்றவற்றை விசேடமாகக் குறிப்பிட முடியும். இவை அனைத்தையும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு உதவிய உள்நாட்டிலுள்ள மற்றும் வெளிநாட்டிலுள்ள எமது நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறுகின்றோம். இறைவன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எப்போதும் அருள்பாளித்து பாதுகாக்கட்டும். நாம் புத்தாண்டுக்குள் நுழையும்போது, தொற்று நோய்க்கு எதிரான போர் இன்னும் தீவிரம் அடைந்துள்ளது.
கொவிட் - 19 இன் இரண்டாவது அலைக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம். தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை சிறிது காலத்திற்கு மாத்திரமன்றி, தொடர்ச்சியாகப் பின்பற்றி ஒழுகவேண்டியுள்ளது.
எனவே, "புதிய ஒழுங்கு" அறிமுகம் ஊடாக, நாம் அனைவரும் அதற்கமைய எமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இப்புத்தாண்டு, கொவிட் - 19 தொற்றுக்கான தடுப்பூசிகள் மற்றும் சுதேச மருந்துகள் தொடர்பிலான எதிர்பார்ப்புக்களை வளர்த்துள்ளது. அரசாங்கத்தினதும், நம் நாட்டு மக்களினதும் கூட்டு முயற்சியால், தேசத்தில் நாம் முகங்கொடுக்கும் சவால்களை வெற்றிகொள்ள முடியும்.
எனவே, நேசத்திற்குரிய எமது தாய் நாட்டிற்கு, செழிப்புமிக்க சிறப்பான ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்த முடியுமென நாம் நம்புகின்றோம். அனைவருக்கும் மீண்டும் இனிய, அமைதியான மற்றும் வளமான 2021 புத்தாண்டு வாழ்த்துக்கள் உண்டாவதாக!
( ஐ. ஏ. காதிர் கான்)