கொழும்பு மற்றும் கம்பஹாவுக்கு அடுத்து மலையக மக்களுக்கு அதிக பாதிப்பு! -வடிவேல் சுரேஷ்

கொழும்பு மற்றும் கம்பஹாவுக்கு அடுத்து மலையக மக்களுக்கு அதிக பாதிப்பு! -வடிவேல் சுரேஷ்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலின் காரணமாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு அடுத்து மலையக மக்களே அதிக பாதிப்பினை எதிர் நோக்கியிருப்பதாகவும், இந்த இக்கட்டான நிலையிலும் மலையகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு பெருந்தோட்ட வைத்தியசாலை கூட இல்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கொழும்பில் தொழில் புரிகின்ற இளைஞர் யுவதிகள் தங்களது சொந்த இடங்களுச் செல்ல முடியாமலும் தலைநகரிலும் வாழ முடியாத அளவுக்கு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கொரோனா தொற்றின் காரணமாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை அடுத்ததாக பதுளை, பசறை, லுணுகலை, ஹாலி-எல, ஊவா பரணகம மற்றும் மஸ்கெலியா, ஹட்டன், பொகவந்தலாவ போன்ற பிரதேசங்களிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

$ads={2}

இந்த இக்கட்டான நிலையிலும் மலையகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு பெருந்தோட்ட வைத்தியசாலை கூட இல்லை. கொரோனா நோய் எமக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இதனால் கர்ப்பிணி பெண்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்து சமூகமுமே பிரச்சினைக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கு குறைந்தபட்சம் மருந்து தெளிப்பான்கள் கூட இல்லை. அத்துடன் மக்களுக்கான தெளிவூட்டல்கள், தமிழ் மொழியில் சேவையாற்றக்கூடிய சுகாதார உத்தியோகத்தர்கள் இல்லாத நிலைமையும் காணப்படுகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15,000 ரூபா தீபாவளி முற்பணம் கொடுக்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தோம். ஆனால் இன்று அது நிராகரிக்கப்பட்டுள்ளது. தான்தோன்றித்தனமாக நிர்வாகங்கள் செயற்படுகின்றன. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையும் பொருட்களும் வழங்குவதாக ஊடகங்களில் அரசாங்கம் தெரிவிக்கின்றபோதும் மலையக மக்களுக்கு அவை வழங்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் மக்களுக்கு வழங்கப்படும் அவ்வித வசதிகளும் மலையக மக்களுக்கு வழங்கப்படுவது கிடையாது.

ஆனால் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயற்படும் மலையக மக்களுக்காக அரசாங்கம் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். அரசாங்கம் மலையக சுகாதாரத்துறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post