ACJU அமைப்பின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அளித்த சாட்சியத்தின் சாராம்சம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ACJU அமைப்பின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அளித்த சாட்சியத்தின் சாராம்சம்!


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அனைத்து நிலைமைகளின் போதும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளதாகவும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட மூதூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமது சபை ஊடாக பாதுகாப்புத் தரப்புக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடி சாட்சி எனவும் குறித்த சபையின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டே அடிப்படைவாதம் தொடர்பில் உள்ள அபாயங்கள் குறித்து தமது சபை தகவல்களை உரிய தரப்புக்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தும் கூட, மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனமை தொடர்பில் தான் கவலையடைவதாக இதன்போது உணர்வுபூர்வமாக சாட்சியம் வழங்கினார்.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை தாம் நல்குவதாகவும் எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் சாட்சியங்களை வழங்கத் தான் தயாராக உள்ளதாகவும் அவர் ஆணைக்குழுவின் உறுபினர்களிடம் சுட்டிக்காட்டினார்.
 
ஈஸ்டர் ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜாவிட் யூசுப் ஆணைக்குழுவில் பிரசன்னமாகியிருந்தார்.

இந்நிலையில், உலமா சபை தலைவரிடம் சாட்சிப் பதிவுகள் ஹலால் சான்றிதழ் விவகாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி, ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது எனவும் ஹராம் என்பது விலக்கப்பட்டது என்றும் பொருளாகும் என சாட்சியமளித்து அது தொடர்பில் நீண்ட விளக்கத்தை ஆணைக்குழுவுக்கு அளித்தார். அத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழுவுக்கு கையளித்த அவர், அதன் பிரகாரம் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்க சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறினார்.

எவ்வாறாயினும் ஏற்பட்ட பல்வேறு நிலைமைகளை கருத்தில் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமது சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்திக் கொண்டதாகவும், தற்போது அந்த செயற்பாட்டை HAC நிறுவனம் முன்னெடுப்பதாகவும் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.

இந்நிலையில், சிரேஷ்ட அரச சட்டவாதியால், கையளிக்கப்பட்ட சஞ்சிகை ஒன்றில் பிரசுரமான கட்டுரை ஒன்றின் மீது அவதானம் செலுத்திய அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி, ( தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த அறிஞர் ஒருவரின் கூற்று) அத்தகைய கூற்றுக்கள் இலங்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாது எனவும், அந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

$ads={2}

இதன்போதான தொடர் சாட்சியத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டளவில் யுத்த காலத்தின்போது, எந்த வகையில் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை பாதுகாப்புத் தரப்பினருக்கு உதவியது என்பதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே சாட்சி என சுட்டிக்காட்டிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, மூதூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் கூட பாதுகாப்புத் தரப்புக்கு தமது பங்களிப்புக்களை வழங்கியதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இஸ்லாமிய அமைப்புக்கள் சில குறித்தும் விரிவாக விளக்கிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, உலமா சபையின் நிறைவேற்றுக்குழுவில் சூபி கொள்கைகளை பின்பற்றும் உலமாக்களே பெரும்பான்மையாக உள்ளதாக ஒவ்வொருவரின் பெயராக குறிப்பிட்டு விளக்கினார்.

அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் யாப்பையும் ஆணைக்குழுவுக்கு அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி கையளித்தார்.

இதனையடுத்து மிக உணர்வுபூர்மவாக சாட்சியமளித்த அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி, 2014 முதல் தேவையான தகவல்களை உரிய தரப்புக்களுடன் பகிர்ந்து கொண்டிருந்த நிலையில், குறித்த தாக்குதலை தடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனமை தொடர்பில் தான் மிகவும் கவலையடைவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 2013 ஆம் ஆண்டு 33 நாடுகளின் பிரதி நிதிகள் முன்னிலையில், கொழும்பு – கலதாரி ஹோட்டலில் ஆற்றிய உரையை ஞாபகப்படுத்திய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, அதில் குறிப்பிடப்பிடப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புக்களை நடை முறைப்படுத்துவதில் 2015 ஆம் ஆண்டின் பின்னர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அவதானிப்பதாக கூறினார்.

இந்நிலையில், மத்ரஸாக்கள் தொடர்பிலும் விசேடமாக விளக்கிய அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, அவை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவந்து ஒரு முறையான மேற்பார்வை செய்தலை வரவேற்றார். இதனைவிட முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தொடர்பில் தனது அதிருப்திகளைப் பதிவு செய்த அவர், அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி அரசியல் மயப்படுத்தப்பட்டது என வர்ணித்தார். இந்நிலையில் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான அமைச்சுக்களை ஏற்படுத்தாது அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வைத்திருப்பது சிறந்தது எனவும், ஏனைய மதத்தவர்களுடன் இணைந்தே பணியாற்ற தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் உலமா சபை தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தியின் சாட்சியம் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி மாலை 4.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.