வவுனியாவில் பதற்றம்; இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி!

வவுனியாவில் பதற்றம்; இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி!

வவுனியா - ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இளைஞர்கள் இருவரை தாக்கியதால் அப்பகுதியில் குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது. இச்சம்பவம் இன்று (17) மாலை ஈச்சங்குளம் இடம்பெற்றது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கையில், “இன்று மாலை குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த சமயம் அவ்வீதியால் வந்த ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்மை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துவிட்டுச் சென்றார்.

சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வந்த அவர், திடீரென்று எம்மைத் தாக்கினார். நாம் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவர் எம்மை தாக்கினார்” என தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஒன்று திரண்ட இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியின் குறுக்காக தடைகளை ஏற்படுத்தியதுடன், வீதியை வழிமறித்து தமக்குரிய நீதியை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் போராட்டக்கார்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை நாளை  வன்னிமாட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்குச் சென்று முறையிடுமாறும், தற்போது போராட்டத்தை கைவிடுமாறும் பொலிஸ் அத்தியட்சகரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கமைய போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டம் காரணமாக தாண்டிக்குளம் ஊடாக பாலம்பிட்டி செல்லும் பிரதான பாதையூடான போக்குவரத்து இரண்டு மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post