அரசாங்கத்தால் கொரோனா இடர்பணமாக கொடுப்பனவு வழங்கப்படும் 5000 ரூபாய் பணம் கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 தாக்கம் குறித்து நேற்று (06) மாலை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று இடர்கால நிவாரணங்கள் பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூர்த்தி திட்டத்தின் கீழ் சகன பியவர கடன் திட்டம் 9119 குடும்பங்களுக்கும், அருணலு 14,687 குடும்பங்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் 7457 குடும்பங்களுக்கும், தினசரி உழைப்போர் மற்றும் வருமானம் இழந்த 8541 குடும்பங்களுக்கும், மேன்முறையீட்டின் அடிப்படையில் 1777 குடும்பங்களுக்கும் என 41 ஆயிரத்து 581 குடும்பங்களுக்கு 207.905 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 13.136 மில்லியன் ரூபாய் பெறுமதியான அவசரகால நிவாரண உதவிகள் 13820 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சமூக நலன் புரிக்கொடுப்பனவுகளாக 10,255 குடும்பங்களுக்கு 51.47 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் 5000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு கிடைக்கவில்லை முறைப்பாடுகள் இருப்பின் பிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

