
தெற்கில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்றை மேற்கொள்வதற்கு இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு தரப்பினரும், பொலிஸாரும் இந்த சதித் திட்டத்தை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த குண்டுத் தாக்குதல்களுக்காக இருநூறு கிலோ கிராம் எடையுடைய சீ4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படவிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் மருத்துவர் சிவரூபனிடம் விசாரணை நடத்திய போது இந்த விடயங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்கள இணைய தளம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய புலிகள் திட்டமிட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணா அம்மான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த மருத்துவர் , தொழில் செய்யும் போர்வையில் பாரியளவில் வெடிபொருட்களை திரட்டியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிகவும் நுட்பமான முறையில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த திட்டத்தை முன்னெடுக்க மருத்துவர் சின்னய்யா சிவரூபன் முயற்சித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபுக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு குறித்து பொலிஸாரோ அல்லது பாதுகாப்பு தரப்பினரோ அதிகாரபூர்வமாக எவ்வித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

