ஹாங்காங் விவகாரம் – சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹாங்காங் விவகாரம் – சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மூள்வதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறி வருகிறது.

கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை முழுவதுமாக கைவிடுவது மட்டும் அல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வெளிப் படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் ராஜினாமா என போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை விரிவுபடுத்தி இருப்பதால் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதனால் ஆரம்பத்தில் வார இறுதிநாட்களில் மட்டும் நடந்து வந்த போராட்டம், தற்போது வாரத்தின் மற்ற நாட்களிலும் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது போராட்டக்காரர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் தரையில் அமர்ந்தும், படுத்து கிடந்தும் போராட்டம் நடத்திய காட்சி.

இதனால் 2 நாட்களுக்கு விமான சேவை முழுவதுமாக முடங்கி விமான நிலையம் மூடப்பட்டது. இதன் மூலம் ஹாங்காங் போராட்டக் காரர்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர்.

எனினும் போராட்டம் மூலமாக ஹாங்காங் மீண்டு வர முடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக மத்திய அரசின் பலத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்றும், நெருப்புடன் விளையாடினால் அது உங்களை பொசுக்கிவிடும் என்றும் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் ஹாங்காங் எல்லையில் சீனா தனது ராணுவ படையை குவித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஹாங்காங் போராட்டம் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹாங்காங்கில் தற்போது மோசமான நிலை நீடிக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். யாரும் இதில் காயம் அடையமாட்டார்கள் என்று நம்புகிறேன். யாரும் கொல்லப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஹாங்காங்கின் எல்லையில் சீனா தனது படையை குவித்து வருவதை நமது உளவுத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அனைவரும் பொறுமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.