கண்டி முஸ்லிம்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இம்முறை திருத்திக்கொள்ள வேண்டும்! -அலி சப்ரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி முஸ்லிம்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இம்முறை திருத்திக்கொள்ள வேண்டும்! -அலி சப்ரி

மக்களுடைய நிதி மக்களுக்காகச் செலவு செய்யப்படுவதற்கு ஆளும் தரப்பிலான பிரநிதித்துவம் மிக அவசியமாகும். எனவே, கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் விமோசனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், பாரிஸ் ஹாஜியாரின் வெற்றிக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக ஒரே இலக்குடனும் கடுமையாக உழைக்க முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன தேசிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நிகழ்வுகள் (18) சனிக்கிழமை காலை முதல் இரவு வரை    நாவலப்பிட்டிய, கம்பளை, கலுகமுவ, முறுத்தகஹமுல, வட்டதெனிய, குறுக்குத்தல, யஹலதன்ன பிரதேசங்கள் உள்ளிட்ட எலமல்தெனிய பிரதான காரியாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்றன. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கல்விமான்கள், வர்த்தகர்கள், மற்றும் புத்தி ஜீவிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை, இந்தத் தேர்தல் காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டும். பொய்யான அரசியல் பரப்புரைகளுக்கு முஸ்லிம் வாக்காளர்கள் ஏமாந்து விடக்கூடாது. கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் நிதானமாகவும் தெளிவாகவும் சிந்தித்து தற்போதைய தேவையறிந்து சரியான தெரிவை, எதிர்வரும் ஐந்தாம் திகதி வழங்குவார்கள் என நம்புகின்றேன்.

குறிப்பாக, ஆளும் தரப்பில் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தான், கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களுடைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை அரசியல் சக்தியுடனும் மக்களுடைய ஒத்துழைப்புடனும் மட்டுமே செய்ய முடியும். இப்பணிகளைத் தொடர்ந்து செய்துகொள்வதற்கு, ஆளும் தரப்பில் போட்டியிடும் பாரிஸ் ஹாஜியாரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதில் வேறு கட்சிக்காரர்களுக்கு வாக்களிப்பதில் எந்தவிதப் பயனுமில்லை.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவே இன்று நாட்டின் ஜனாதிபதி. 2025 வரைக்கும் அவரே ஜனாதிபதி. ஜனாதிபதி ஆளும் தரப்பில் உள்ளதால் பொதுத் தேர்தலிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாங்கள் அவர்களுடன் பங்காளிகளாக கைகோர்க்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்காக, இம்முறை இரு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதில் ஒன்று புத்தளம் மாவட்டத்திற்கும் மற்றையது கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறாயின், இந்த இருவர்களில் ஒருவரைப் பெற்றுக் கொள்வது என்பது பெரியதொரு பொக்கிஷமாகும். கண்டியில் பாரிஸ் ஹாஜியார் வெற்றி பெறுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் இருக்கிறது. அதேவேளையில், முஸ்லிம் மக்களுக்கு பெரியதொரு பொறுப்பும் இருக்கிறது.

இத்தேர்தலில் எவ்வளவு பேர் போட்டியிட்டாலும், பாராளுமன்றத்திற்குச் செல்லக் கூடிய வாய்ப்பானது வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்டி வாழ் மாவட்ட மக்கள் உணர வேண்டும். சுயேச்சைக் குழு என்ற அணிக்கு எந்தவொரு தகுதியோ திறமையோ பிரமல்யமோ போன்ற எவையுமே இல்லை. சுயேச்சைக் குழுவுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளும் ஒரு வீணான வாக்குகளாகவே அமையும். இன்று ஐக்கிய தேசியக் கட்சியிலும் வேலையில்லை. அது இரண்டாகப் பிரிந்து செயற்படுகிறது. எனவே நாம் அனைவரும் ஒரே இலக்குடன் ஆளும் கட்சியில் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பாரிஸ் ஹாஜியாருக்கு வாக்களிப்பது தான் சிறந்த செயற்படாக இருக்கும் என்றார்.

(ஐ.ஏ. காதிர் கான்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.