மக்களே உஷார்: புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள் தற்போது சந்தையில்!

இலங்கை சந்தையில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய 200 மெட்றிக் டொன் காய்ந்த மிளகாய் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இருந்து, 16 இறக்குமதியாளர்களால் குறித்த காய்ந்த மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை சுங்க விதிகளை மீறி சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விநியோகித்தவர்களுக்கு எதிராக சுங்க வழக்கினை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்கள், இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கை கிடைக்கும் வரையில், தனியார் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்த, கடுமையான நிபந்தனைகளுடன் சுங்கத் திணைக்களம் அனுமதியளிக்கிறது.

இந்த பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், குறித்த உணவுப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாது.

எனினும் இந்த நிபந்தனையை மீறி அவர்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காய்ந்தமிளகாய்களை சந்தைப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காய்ந்த மிளகாய்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரசாயனப் பகுப்பாய்வில், அவற்றில் எஸ்லடொக்சின் என்ற பதார்த்தம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தமை தெரியவந்திருப்பதாக, சுற்றாடல் தொழிற்துறை மற்றும் சுகாதார பாதுகாப்பு பணிமனையின் உணவு பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்திய அதிகாரி சப்புமல் தனபால தெரிவித்துள்ளார்.

இந்த விபரங்கள் அடங்கிய அறிக்கை சுங்கத்திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த 200 மெட்றிக் டொன் காய்ந்த மிளகாய் முழுவதும் களஞ்சியசாலையில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உடனடியாக சந்தையில் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்திருப்பதாக, அதன் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.