ஆட்பதிவுத் திணைக்கள பணிகள் வழமைக்கு திரும்பியது!

ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் என்பவற்றின் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் வழமை போல் இடம்பெறுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 1,000 இற்கு மேற்பட்டோர் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரகாலமாக அரச துறை அதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பினால் குறித்த இரு நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.