“என் குழந்தைகள், தந்தை மீது சத்தியம்”

“எந்தவித கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபடவில்லை. இதை என் குழந்தைகள், தந்தை மீது சத்தியம் செய்து சொல்கிறேன். ரூ. 100 கோடி கொடுத்தாலும் சூதாட்டத்தில் ஈடுபட மாட்டேன்”, என ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், 36. கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கில் சிக்கினார். சுப்ரீம் கோர்ட் இவரை விடுவித்தது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ), போட்டிகளில் பங்கேற்க இன்னும் அனுமதி தரவில்லை.
இது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில்,”எவ்வித சூதாட்டத்திலும் நான் ஈடுபடவில்லை. இதை என் குழந்தைகள், தந்தை மீது சத்தியம் செய்து சொல்கிறேன். ரூ. 100 கோடி கொடுத்தாலும், எதிர்காலத்திலும் செய்ய மாட்டேன். உடல்நலக்குறைவாக உள்ள தந்தை, நான் போட்டியில் பங்கேற்பதை பார்க்க ஐந்தரை ஆண்டுகளாக காத்திருக்கிறார். இப்படி பல நெருக்கடியான நிலையில் உள்ளேன்.ஆதாரம் உள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்ட எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இன்னும் சிரித்த முகத்துடன் விளையாடி வருகின்றனர். சிலர் ஓய்வு அறிவித்துவிட்டனர். இவர்களின் விவரங்களை, போலீசார் என்னிடம் காட்டினர். இந்த வீரர்களை ஆதாரத்துடன் என்னால் காட்ட முடியும். ஆனால், நான் அப்படிப்பட்ட நபர் இல்லை. எனது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப, ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. சுப்ரீம் கோர்ட் என்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதித்துள்ளது. உலகம் முழுவதும் பல டுவென்டி 20 லீக் தொடர்கள் நடக்கின்றன. என் குடும்ப உறுப்பினர்களை, கவனித்துக்கொள்ள மீண்டும் கண்டிப்பாக விளையாட வேண்டும்,”என்றார்.