லிப்டில் சிக்கி தவித்த போப் ஆண்டவர் – வாடிகன் தீயணைப்பு படை வீரர்கள் துணிகர நடவடிக்கை!

வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாராந்திர சிறப்பு பிரார்த்தனையை நடத்துவார். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு போப் ஆண்டவருடன் இணைந்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்வார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் வாராந்திர சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான மக்கள் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் முன்பு திரண்டிருந்தனர். அவர்கள் போப் ஆண்டவரின் வருகைக்காக காத்திருந்தனர்.

ஆனால் போப் ஆண்டவர் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை. அவர் 7 நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவரை பார்த்ததும் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து, கூட்டத்தினர் மத்தியில் பேச தொடங்கிய போப் ஆண்டவர், “முதலில், தாமதமாக வந்ததற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்” என கூறிவிட்டு புன்னகைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நான் லிப்டில் சிக்கிக்கொண்டேன். 25 நிமிடம் லிப்டுக்குள்ளேயே இருந்தேன். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து என்னை மீட்டனர்” என கூறினர்.

மேலும், “சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு துறைக்கு கைத்தட்டல்களை கொடுங்கள்” என்றார். அதை கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கைகளை தட்டி உற்சாக ஒலி எழுப்பினர்.