குண்டுதாரிகளின் தொலைபேசி மற்றும் மேலதிக தகவல்களை FBI மீட்டுள்ளது!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் நேற்று குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் சமர்ப்பித்த பி அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.


குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகள் அமெரிக்காவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, எவ்பிஐ அதிகாரிகளால் அவற்றின் உள்ளக தரவுகள் மீட்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற விசாரணைகளை நடத்துவதற்கு சிறிலங்கா புலனாய்வு முகவர் அமைப்புகளிடம் போதிய வசதிகள் இல்லாததால், மேலதிக விசாரணைகளுக்காக அலைபேசிகள் எவ்பிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா முகவர் அமைப்புகள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு, எவ்பிஐ, மற்றும் இன்னொரு அமெரிக்க புலனாய்வு மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவரக அதிகாரிகளும், உதவி வருகின்றனர்.


எவ்பிஐ அதிகாரிகள் வெடிபொருட்கள், கைரேகை ஆய்வு, மரபணு ஆய்வு, அலைபேசி ஆய்வுகள் போன்ற விசாரணைகளில் நிபுணத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.


தாம் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்கும் எவ்பிஐ அதிகாரிகள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.