ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்ட் வெற்றியை சாதனை வெற்றியாக பதிவு செய்தது!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ஓட்டங்களால் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

கடந்த வருடம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தானின் முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 342 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில், இரண்டாவது இன்னிங்சிற்காக 260 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 205 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்படி, 398 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 173 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 224 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களையும் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய ரஷித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.