இந்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது வல்லுறவு குற்றம் சுமத்திய மாணவி கைது!

இந்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்திய சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான இம்மாணவி கப்பம் கோரியமை தொடர்பான குற்றச்சாட்டில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கப்பம் கோரிய குற்றச்சாட்டில் கைதான மாணவி

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இம்மாணவி, சுவாமி சின்மயானந்த் தனக்கு சட்டக் கல்லூரியில் இடம் அளித்த பின்னர், விடுதியில் குளிக்கும் போது படம்பிடித்து மிரட்டி, ஒரு வருட காலமாக தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

73 வயதான சின்மயானந்த் இக்குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுவாமி சின்மயானந்த் இந்நிலையில், கடந்த மாதம் மேற்படி மாணவியும் அவரின் நண்பர்களும் சுவாமி சின்மயானந்தாவின் ஆபாச வீடியோக்களை வெளியிடப்போவதாக மிரட்டி 50 மில்லியன் இந்திய ரூபா கப்பம்கோரினர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று மேற்படி மாணவியை உத்தரபிரதேசத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர். அவரை 14 நாட்கள் விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.