கோட்டாவிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானது!

yazh news
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானது என கோட்டாபய ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் தவறானது என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டு தெளிவற்ற விதத்தில் இருப்பதாகவும் அவர் உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த விதம் சட்ட விரோதமானது என்பதால் குறித்த வழக்கை நிராகரித்து உத்தரவிடுமாறு கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட விஷேட மேன்முறையீடு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மேன்முறையீடு சிசிர த ஆப்ரூ, பிரியன்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய நீதிபதிகள் முன்னலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இரண்டு சதித்திட்ட குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் ஒரே நேரத்தில் இரண்டு சதித்திட்ட குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றம் தொடர்பில் பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷ மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பினும் அது நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு நியமிக்கப்பட்டிருந்தமை முற்று முழுதாக சட்ட விரோதமானது எனவும் பொலிஸ்மா அதிபரினால் குறித்த பொலிஸ் பிரிவு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரிற்கு பொலிஸ் பிரிவு ஒன்றை நியமிக்க அதிகாரம் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சருக்கே அந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு, பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்டிருப்பதால் அது சட்ட விரோதமானது என்பதினால் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளும் சட்ட விரோதமானது என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட விரோத விசாரணைகளை அடிப்படையாக கொண்டு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் சட்ட விரோதமானது என்பதினால் அதனை விசாரணைக்குட்படுத்தாது நிராகரிக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இம்மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-தெரண