ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் இன்னும் முடியவில்லை.! -சரத் பொன்சேகா

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்வது தொடர்பாக பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று (25) கிரிபத்கொடை மாகொல பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் இன்னும் முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டுமாயின் அதற்கான சில நிபந்தனைகளை பிரதமர் முன்வைத்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டால் மட்டுமே பிரதமர், அவரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக ஆராய்வார்.

ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணியும் இணங்கும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை போரில் அங்கவீனமடைந்த படையினரின் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொன்சேகா,

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள படையினர் நாட்டுக்கு செய்த சேவையை மதிக்கின்றேன். அரசாங்கத்தினால், கட்டாயம் அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.

எனினும் எதிர்ப்புகளில் ஈடுபட்டு சம்பளத்தை அதிகரித்துக்கொள்ளும் முறையோ, எதிர்ப்பில் ஈடுபட்டு நலன்புரிகளை பெற்றுக்கொள்ளும் முறையோ இராணுவத்தில் கற்பிப்பதில்லை.

போரினால் நானும் அங்கவீனம் அடைந்தவன். எனினும் சிலவற்றை பெற்றுக்கொள்ள நான் போராட்டங்களை நடத்தியதில்லை எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.