போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து!

Bohra Maithripala Sirisena
வறுமையை ஒழித்து, அமைதியை உருவாக்க இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டியது தற்போது நாட்டுக்கு அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முஹம்மது நபியின் போதனைகளும் இதனையே வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு அண்மையில் கொழும்பு பம்பலப்பிட்டி கரையோர வீதியில் உள்ள பிரதான போரா பள்ளிவாசலில் ஆரம்பமாகியதுடன் 10 தினங்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டின் 5வது நாளான இன்று ஜனாதிபதி மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அமைதிக்கு அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளும் சமூகமான போரா சமூகத்தின் இ்நத மாநாடு இலங்கை நடைபெறுவது நாட்டுக்கு கௌரவமானது எனக் கூறியுள்ளார்.

“ இலங்கை எமது நம்பிக்கை” என்ற தலைப்பில் இம்முறை போரா முஸ்லிம்களின் மாநாடு நடைபெறுகிறது. 40 நாடுகளை சேர்ந்த 21 ஆயிரம் போரா முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து 18 ஆயிரத்து 500 போரா முஸ்லிம்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கையை சேர்ந்த 2 ஆயிரத்து 500 போரா முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர்.

சகல இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் சமாதானம், நம்பிக்கை கட்டியெழுப்ப இலங்கைக்குள் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு வலுவூட்டி, அடிப்படைவாதத்தை புறக்கணித்து, அமைதிக்கு அர்ப்பணிப்பை மேற்கொள்வது போரா முஸ்லிம்களின் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை வர்த்தகத்திற்கு சிறந்த நாடு என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவது இன்னுமொரு நோக்கமாகும்.

போரா முஸ்லிம்களின் இந்த மாநாட்டின் மூலம் இலங்கைக்கு 31 மில்லியன் அந்நிய செலவாணி கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறான மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன் அதில் 7 ஆயிரம் பேர் வரை கலந்துக்கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன உள்ளிட்டோரும் ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

-Tamilwin