ஆட்கடத்தலை தடுக்க அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை தொடர்ந்து நடவடிக்கை!

படகு மூலம் நடக்கும் ஆட்கடத்தல் முயற்சிகளை தடுக்க இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா தொடர்ந்து இணைந்து செயல்படும் என இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் அதிகரித்திருப்பது தொடர்பாக நடந்த சந்திப்பின் பிறகு இக்கருத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் பகுதியில் நடக்கும் ஆட்கடத்தல் பயணங்களை தடுக்க இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி, எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை தளபதி கிராக் புர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்குப்பெற்றுள்ளனர்.

ஆட்கடத்தல் (People Smuggling) மற்றும் மனித கடத்தல் (Human Trafficking) சிக்கல்களை விவாதிக்கும் இலங்கை - அவுஸ்திரேலியா இடையேயான ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றம் தொடர்பான கூட்டு செயல் குழு கடந்த ஆண்டு அக்டோபரில் இலங்கையில் கூடியிருந்தது.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் 11 அன்று அவுஸ்திரேலியாவில் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்ட அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை தளபதி கிராக் புர்னி, “அவுஸ்திரேலியாவில் உள்ள அரசியல் சூழல், தேர்தல் மற்றும் இலங்கையில் நிகழ்ந்த துயர்நிறைந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் படகு வழியாக வர முயல்பவர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரித்திருக்கலாம்” எனக் கூறியிருந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை அவுஸ்திரேலியாவை அடைய முயன்ற 37 படகுகளில் வந்த 865 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதில் இலங்கையைச் சேர்ந்த 204 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.