பயங்கரவாத ஒழிப்பு புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் மீளாய்வு கூட்டம் நேற்று (11) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது அல்லது பங்கேற்காதிருப்பது தொடர்பாக தனது அபிப்பிராயத்திற்கு அமைய தீர்மானிக்க முடியும் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

எனினும், தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலும் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.