மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை புதைக்க நடவடிக்கை!

Easter Sunday attack yazhnews
மட்டக்களப்பு, சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியான மொஹமட் ஆசாத்தின் உடற்பாகங்களை காத்தான்குடி பள்ளிவாசல் மயானத்தில் புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காத்தன்குடி மொஹிதீன் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையின் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்கள் பொதுமக்களின் எதிர்ப்பால் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதுடன் மீண்டும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

குறித்த தற்கொலைதாரியின் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக புதைப்பதற்கு நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த உடற்பாகங்களைப் புதைப்பதற்கு மட்டக்களப்பில் சகல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தமையினால், அதனை மீண்டும் புதைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படாதிருந்தன.

இந்நிலையில் காத்தான்குடி இலக்கம் 3இல் உள்ள மொஹிதீன் பள்ளிவாசல் மயானத்தில் குறித்த உடற்பாகங்களை புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.