சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம்!

நாட்டில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட காலி, மாத்தறை, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இடர் நிவாரண நடவடிக்கையின் கீழ் துரிதமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்களின் தலைமையில் முப்படை, பொலிஸார், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் துரிதமாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தெற்கு, மத்திய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழையினால் 200 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த சீரற்ற மழை காரணமாக காலி, மாத்தறை, களுத்துறை, உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் காலி மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 115 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 2,443 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த குடும்பங்களைச் சேர்ந்த 9,592 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன வித்தியாபத்திரண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் காலி மாவட்ட பிரதேச செயலக பிரிவில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக 6 குடும்பங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, 12 குடும்பங்கள் ஓரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே போன்று இந்த மாவட்டத்தில் 71 குடும்பங்களின் வீடுகள் ஓரளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 22 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக தற்பொழுது இடர் நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக 996 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களைச் சேர்ந்த 2416 பேர் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் இடர் அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3, ஓரளவிற்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 130 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட நிவாரண சேவை ஊழியர்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் வளல்லாவிட்ட மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக பிரதேசத்தில் பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நேற்று இரவு 10.00 மணிக்கு பின்னர் இந்த பிரதேசத்தில் மழை ஓரளவிற்கு தணிந்துள்ளது என்றும் அனர்த்த நிலை இல்லை என்றும் களுத்துறை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அதிகாரி லெப்டினன் கேணல் சுஜித்குலசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏற்படக்கூடிய சீரற்ற காலநிலையை எதிர்கொள்வதற்கு மாவட்ட செயலாளரின் தலைமையில் முப்படை மற்றும் பொலிஸாரும் இடர் முகாமைத்துவ நிவாரண பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியபடி தற்போதைய சீரற்ற காலநிலை நாளை 25 ஆம் திகதி வரையில் நிலவக்கூடும் என்றும் இந்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதலான கவனத்துடன் செயற்படவேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்