பாலித தெவரப்பெரும சுகயீனமுற்ற நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையில்!

மத்துகம நீதிமன்றத்தில் இருந்த போது சுகவீனமுற்ற தெவரப்பெருமவை நேற்று (10) மாலை 5.30 மணிக்கு களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்து வந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலம் தேறியதும் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் சில தோட்ட தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி, தமிழரான தொழிலாளி ஒருவரின் சடலத்தை தனியார் தோட்டத்தில் அடக்கம் செய்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, பிரதியமைச்சரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

பல தசாப்தங்களாக தோட்டத்தில் தொழில் புரிந்து வசித்து வந்த முதியவர் ஒருவர் அண்மையில் காலமானார்.

அவரது சடலத்தை தோட்ட மயானத்தில் அடக்கம் செய்ய தோட்டத்தின் உரிமை மறுத்துள்ளதுடன் அதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்தார்.

இந்த நிலையில், அங்கு சென்ற பாலித தெவரப்பெரும உள்ளிட்டோர், பொலிஸாரின் எதிர்ப்பையும் மீறி சடலத்தை தோட்ட மயானத்தில் அடக்கம் செய்தனர்.