புதிதாக மேலும் 2000 இடங்களில் தீ – பற்றியெரிகிறது அமேசான் காடு!

உலகளாவிய சிறப்பு வாய்ந்த அமேசான் காட்டில் கடந்த 8 மாதத்துக்கும் மேலாக காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. இந்த தீ பிரேசில் நாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் பற்றி எரிகிறது.

இதுவரை மொத்தம் 88,816 இடங்களில் தீப்பிடித்துள்ளது. அவற்றை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. இது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அமேசான் காட்டில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க 21 கோடி அமெரிக்க டாலர் அதாவது ரூ.144 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. முதலில் அதை ஏற்க மறுத்த பிரேசில் அதிபர் ஜார் போல்சோனரோ, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தன்னை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டால அந்த பணத்தை பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இதற்கிடையே பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் மேலும் 2 ஆயிரம் இடங்களில் புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் காட்டில் தீ பரவுவதற்கு விவசாயிகள் தான் காரணம் என தெரிய வந்துள்ளது. விலை நிலம் மற்றும் மேய்ச்சல் நிலத்துக்காக காடுகள் தீ வைத்து அழிக்கப்படுவதாக தெரிகிறது. எனவே, காடுகளுக்கு தீவைக்க தடை விதித்து பிரேசிலில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் இயற்றிய 48 மணி நேரத்தில் மேலும் 2 இடங்களில் தீ பரவியுள்ளது உலக நாடுகளை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.