தௌஹீத் ஜமாத், சஹ்ரான் ஹாசீம் தொடர்பில் இத்தனை அறிக்கையா? உறங்கிக் கிடந்தது யார்?

2016 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினம் வரையான மூன்று வருட காலப்பகுதியில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அந்த அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் தாக்குதல் நடத்தவுள்ளது தொடர்பான 97 எச்சரிக்கை அறிக்கைகள் அரச புலனாய்வு சேவையால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் ஊடாக அடிப்படை உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மீள் பரிசீலனை ஏழு பேர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இந்த குழாமின் தலைமை நீதிபதியாக செயற்படுகிறார்.

புவனெக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குறித்த நீதிபதிகள் குழாமின் மற்றைய உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

இந்த மனுக்களின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினம் வரையான காலப்பகுதியில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அந்த அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 97 அறிக்கைகள் அரச புலனாய்வு சேவையால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்