ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவொரு பிரச்சனைகளும் இல்லை

ஒரே நாட்டுக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண வடக்கு கிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் என்டப்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜானாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவொரு பிரச்சனைகளும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக கட்சியாகும். எமது கட்சிக்குள் சர்வாதிகார போக்குகள் இல்லை. பேச்சு மூலமும் ஐக்கியம் ஊடாகவும் நாம் ஜனநாயக ரீதியாக தீர்மானம் எடுப்போம்.

எமது கட்சி தனிப்பட்ட குடும்பத்திற்கோ அல்லது ஒரு தரப்பினருக்கோ மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறானவர்களே எமது கட்சிக்குள் பிரச்சனைகள் இருப்பதாக காட்ட முற்படுகின்றனர். நாட்டில் உள்ள ஒரு மக்கள் கூட்டம் தாம் இரண்டாம் மூன்றாம் பிரஜைகளாக வாழ்கின்றோம் என எண்ணக் கூடாது.

இலங்கையில் அனைவருக்கும் ஒரேநாடு ஒரே தேசம் ஒரே மக்கள். மத,இன ரீதியாக பார்க்காது அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். நாட்டில் சட்டத்திலும் அரசியலமைப்பிலும் இவ்விடயம் உள்ளது. ஒரு பிரிவினரை புறம் தள்ளி நாம் செயற்பட முடியாது. நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக மதிக்கும் அரச நிர்வாக கட்டமைப்பு உள்ளது என்றார்.