தீர்க்கமான முடிவுக்காக சஜித் இன்றைய தினம் கூட்டமைப்புடன் முக்கிய பேச்சு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கான ஆதரவைப்பெறும் நோக்கில் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இன்றையதினம் சஜித்தரப்பு முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை நேற்றிரவு அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்புக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையே நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டதாக அமைச்சர் மனோகேணசன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் சம்பிக ரணவக்க (ஜாதிக ஹெல உறுமய),அமைச்சர் மனோ கணேசன்,அமைச்சர் பழனி திகாம்பரம் (த.மு.கூ.),அமைச்சர் ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர் (ஸ்ரீ.மு.கா),அமைச்சர் ரிசாத் பதுயுதீன் (அ.இ.ம.கா),அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம், எரான் விக்கிரமரத்ன (ஐ.தே.க) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுத்தடிக்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்பது உட்பட பல முக்கிய முடிவுகள் இதன்போது எட்டப்பட்டன.

அத்துடன் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சஜித் பிரேமதாசா தரப்பினர் நடத்தவுள்ள சந்திப்பு முடிவுபெறும் வரை நேற்றைய கலந்துரையாடலில் இடம்பெற்ற முடிவுகள் தொடர்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்போவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.