ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் சி.ரி.ஐ.டி இற்கு ஏன் ஒப்படைக்கப்பட்டார்?

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை தொடர்பில் உறுதி செய்யவும் முறையான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும் முகமாகவும் அவர் இவ்வாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்ப்ட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரின் ஒருவர் தெரிவித்தார்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இஸ்லாம் மார்க்கத்தை கற்பிக்கும் பிரபலமானவர்களில் ஒருவராக கருதப்படும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி அதிகாலை மாவனெல்லை – முருத்தவல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அவரிடம் முதலில் 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை நடந்த நிலையில், பின்னர் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.