ரணிலை சிறைச்சோறு உண்ண வைப்பார மைத்திரி?

“இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும். முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விட, இன்னும் பெரியவர்களை தண்டிக்க குற்றப்பத்திரம் தயாராகி விட்டதாக அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் 68வது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

“தீர்ப்பு சரியான பக்கத்திற்கு” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற மாநாட்டில் நாடளாவிய ரீதியில் வருகை தந்த ஏராளமான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு விழா சஞ்சிகை மற்றும் கட்சியின் எதிர்கால கொள்கைத் தொடரும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மோசடியில் சிக்கிய அவருக்கு மேலானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர கூடுதல் ஆவணங்கள் தயாராக உள்ளன என்றார்.

மாகாணசபை தேர்தலை நடத்தாமைக்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்க வேண்டும் என்றார். மாகாண எல்லைகளை மீள் நிர்ணய அறிக்கையை, பிரதமர் ரணில் தலைமையிலான குழு சமர்ப்பிக்காததை சுட்டிக்காட்டினார்.

2015 ஆம் ஆண்டில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் ஊழல் நிறைந்த மேற்தட்டு வர்க்கத்தை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் அமைப்பை தோற்கடிக்கும் ஒரு சக்தியை வழங்குமாறும் ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.