தாமரைக் கோபுர நிர்மாணிப்பின் போது நிதி மோசடி – அம்பலப்படுத்திய மைத்திரி!

இலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின என ஜனாதிபதி மைத்திரி தனது உரையில் கூறியுள்ளார். 
இது தொடர்பில் அவர் கூறியதாவது, 
உத்தேச மொத்த செலவு 19 பில்லியன் ரூபாவான தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக 16 பில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்குவதற்கு சீனாவின் EXIM வங்கி உடன்பட்டிருந்தது. 
அந்த உடன்பாட்டிற்கமைய இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் 2012.01.03ஆம் திகதி சீனாவின் CEIEC மற்றும் ALIT ஆகிய நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்குமிடையே ஒரு முத்தரப்பு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. 
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின. அதன் பெறுபேறாக சீனாவின் EXIM வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் கடன் 12 பில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. 
எனினும் அதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த அக்கடன் தொகைக்காக ஒவ்வொரு வருடமும் கடன் தவணைப் பணமாக 2400 மில்லியன் ரூபா அதாவது 240 கோடி ரூபா பணத்தை இலங்கை செலுத்தி வந்தது. 2018ஆம் ஆண்டுக்காகவும் இலங்கை அக்கடன் தவணைக்கான 240 கோடி ரூபாவை செலுத்தியுள்ளதுடன், அதனை இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு அவ்வாறே வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டுக்கான கடன் தவணைப் பணத்தில் முதலாவது அரையாண்டுக்கான 120 கோடி ரூபா தற்போது செலுத்தப்பட்டுள்ளது. 
மேலும் தாமரைக் கோபுரத்தின் அடுத்தகட்ட நிர்மாணப் பணிகளுக்கு மேலும் 300 கோடி ரூபா தேவை. பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வளத்தை பாதுகாக்க வேண்டியதன் பொறுப்பு பற்றி சுட்டிக்காட்டிய அவர், தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக அதனை ஒரு அரச நிறுவனமாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். 
அதற்காக பணிப்பாளர் குழுவொன்றை அமைத்து தனியார் நிறுவனமொன்றையொத்த வகையில் செயற்படும் அரச நிறுவனமாக நடாத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.