அடுத்த வாரம் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த வாரம் முதல் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க இரசாயன பகுப்பாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்க மேற்கண்டவாறு கூறினார்.

அந்தவகையில் முதலில் கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் குறித்த அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மற்ற அறிக்கைகள் மிக விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த அறிக்கைகளில் கொழும்பில் உள்ள மூன்று பிரபல ஹோட்டல் வளாகங்களில் ஏற்பட்ட வெடிப்புகள், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் சாய்ந்தமருது வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் அடங்கும்.

குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க, ஏழு ஆய்வாளர்களை அரசாங்க இரசாயன பகுப்பாளர் திணைக்கள நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.