இலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா?

இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் எந்த அளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு பங்களிப்பு வழங்கும் என்பது தொடர்பிலும் அரசியல் கட்சிகள் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றன.

எனினும், சிங்களத் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பின்னணியில், தமிழ் பேசும் சமூகம் சார்பில் இந்த முறையும் ஒரு சிலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பௌத்தர்களை தவிர்த்த ஏனைய தரப்பினருக்கு இலங்கை அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியாக முடியாது என சமூகத்தில் கருத்து ஒன்று நிலவுகிறது.

இது தொடர்பில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் சுப்ரமணியம் துஷாந்தனின் கருத்து.

´´தமிழர்களோ, முஸ்லிம்களோ ஜனாதிபதியாக வர முடியாது என கேள்விப்பட்டுள்ளேன். இதுவொரு பௌத்த நாடு. பௌத்தர்கள் மாத்திரமே இந்த நாட்டில் ஜனாதிபதியாக வர முடியும் என சொல்லியிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த அளவிற்கு பௌத்தர்கள் மாத்திரமே ஜனாதிபதியாக வரமுடியும்" என அவர் தெரிவித்தார்.

மற்றுமொரு நிறுவனத்தில் பணியாற்றும் சதாசிவம் சசிகுமாரின் கருத்து.

´´நிச்சயமாக வர முடியாது. பௌத்தராக இருந்தால் மாத்திரமே ஜனாதிபதியாக ஒருவரை நியமிக்க முடியும் என நான் கேள்விப்பட்டுள்ளேன்" என சதாசிவம் சசிகுமார் தெரிவித்தார்.

பௌத்தர்கள் தவிர்த்த ஏனையோர் ஜனாதிபதியாக முடியாது என்ற கருத்து சமூகத்தில் அதிக அளவில் பேசப்படுகிற நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் போட்டியிட்ட வரலாறும் இருக்கிறது.

இலங்கையில் 1982 ஆம் ஆண்டு, நாட்டின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட நாள் முதல் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதற்கான தகவல்கள் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஆவணங்களில் உள்ளன.

1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் சின்னத்தில் தமிழரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் போட்டியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, 1988 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் எந்தவொரு தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கவில்லை.

எனினும், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம் கட்சி சார்பில் அப்துல் ரசூல், தராசு சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு தமிழ் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் வேட்பாளரோ போட்டியிடவில்லை.

எனினும், 2010 இல் நடைபெற்ற தேர்தலில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களும் ஒரு தமிழ் வேட்பாளரும் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பிபிசி தமிழ்)