உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் பென் ஸ்டோக்ஸ் அபார சதம் பெற்று தனி வீரராக இங்கிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை மீட்டது போன்று அதே பாணியில் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி தோல்வியை நெருங்கிய நிலையில் கடைசி விக்கெட்டுக்கு தனியே சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளை விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வர உதவினார்.

ஹெடிங்லியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை (25) சவாலான 359 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் மாத்திரம் எஞ்சி இருக்கும்போது 73 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது.

அப்போது பென் ஸ்டோக்ஸ் கடைசி வீரரான ஜெக் லீச் உடன் இணைந்து ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பினார். ஆறு வாரங்களுக்கு முன் லோட்சில் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் செய்த அதே சாகசத்தை இந்தப் போட்டியிலும் அவர் நிகழ்த்திக் காட்டினார்.

நேதன் லியோனின் ஓப் ஸ்பின் பந்துகளுக்கு மூன்று சிக்ஸர்களை விளாசிய பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் ஹேசல்வுட்டின் வேகப்பந்துக்கு தொடர்ச்சியாக ஒரு பௌண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதன்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 8 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.

வெற்றி பெறுவதற்கு இன்னும் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது பென் ஸ்டோக்ஸின் கடினமான பிடியெடுப்பொன்றை மார்கஸ் ஹரிஸ் தவறவிட்டார். பின்னர் அடுத்த ஓவரில் ஜெக் லீச் ரன் அவுட் ஆகும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணி தவறவிட்டது. பின்னர் அடுத்த பந்தில் பென் ஸ்டோக்ஸின் LBW ஒன்றை அவுஸ்திரேலியா ‘ரிவியு’ கேட்கவில்லை.

அடுத்த ஓவரில் ஜெக் லீச் தடுமாற்றத்துடன் ஒரு ஓட்டத்தை பெற போட்டி சமநிலை பெற்றது. பின்னர் அடுத்த பந்தை முகம்கொடுத்த பென் ஸ்டோக்ஸ் அதனை பௌண்டரிக்கு செலுத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது 219 பந்துகளுக்கு முகம்கொடுத்த பென் ஸ்டோக்ஸ் 11 பௌண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இங்கிலாந்து அணி 359 ஓட்ட வெற்றி இலக்கை எட்டியது அந்த அணியின் சாதனையாகும். இதற்கு முன்னர் 1928 இல் 332 ஓட்ட வெற்றி இலக்கை எட்டியதே கடந்த 91 ஆண்டுகளாக சாதனையாக இருந்து வந்தது.

பல திருப்பங்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 179 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததோடு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 67 ஓட்டங்களுக்கு சுருண்டு அதிர்ச்சி கொடுத்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ஓட்டங்களை பெற்றது.