சிங்கள அரசர் காலத்திலேயே சிங்களவர்களைப் பாதுகாக்க முன்னின்று செயற்பட்ட முஸ்லிம்கள்.!


அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும் இனவாத செயற்பாடுகளை தோற்கடிக்க முன்வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறைகூவல் விடுத்துள்ளார்.

குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் இன்று அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும், இனங்களை பிளவுபடுத்துவதற்கான சதிகளை எதிர்கொண்டு அவற்றை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

முஸ்லிம் இனத்தவரை இலங்கையில் சிறுமைப்படுத்த ஒருசிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

தங்களின் அரசியல் நலன்களை முன்னிட்டே அவர்கள் குறித்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

எந்தவொரு இனத்திலும், எந்தவொரு குழுவிலும் ஒருசில கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அதனை யாராலும் தடுக்க முடியாது. அதற்காக ஒட்டுமொத்த இனத்தையும் குறைகூறுவதை விடுத்து கெட்டவர்களை தனிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் சிங்கள அரசர் காலத்தில் இருந்தே சிங்களவர்களைப் பாதுகாக்க முன்னின்று செயற்பட்டார்கள்.

அந்த வகையில் நாம் இப்போது இலங்கையர் என்ற ரீதியில் முன்வந்து இனங்களைப் பிரித்தாள்வதற்கான முயற்சிகளை தோற்கடிக்க முன்னின்று செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.