அவசரகாலச் சட்டம் நிறைவுக்கு வந்தது தொடர்பாக மஹிந்த தெரிவித்த அதிருப்தி

அவசரகாலச் சட்டத்தை நீக்கியதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு எனவும்,  இதனை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

BMICHஇல் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் குண்டுகள், துப்பாக்கிகள் கிடைக்கப் பெறுவதாகவும், LTTE பயங்கரவாதிகள் பலமடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டத்தை பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் பயன்படுத்தினால் அது நல்லது. ஆனால், மாற்றிப் பிரயோகிப்பதனாலேயே நாம் எதிர்க்கின்றோம்.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய எல்லோரையும் பிடித்து விட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. பின்னர் சில நாட்களின் பின்னர் இன்னும் இருவரை கைது செய்ததாக தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கின்றோம். இவ்வாறுதான் அரசாங்கத்தின் கருத்து காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.