ஹிஸ்புல்லாஹ் நிச்சயம் சிறைக்கு சென்றே ஆக வேண்டும்! -ரதன தேரர்

rathana himi
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு சவுதி அரேபியாவில் நிதி கிடைத்தமை சம்பந்தமான வழக்கை விசேட வழக்காக கருதி விரைவாக விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெட்டிகலோ கெம்பஸ் நிறுவனத்தை எந்த வகையிலும் திறக்க இடமளிக்க போவதில்லை. ஹிஸ்புல்லாவின் வங்கிக் கணக்குகளில் ஆயிரத்து 700 கோடி பணம் இருக்கின்றது. இந்த பணத்தை பெற்றுக்கொண்ட விதம் குறித்து கணக்காய்வு அறிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு எடுக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு ஏதுவான அடிப்படைகள் சவுதி நிதி மூலம் உருவாகியது.

2017 ஆம் ஆண்டு பிரதமர் விசேட நிதி சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்ததுடன் அது வெளிநாட்டு நிதி சட்டமூலமாக நிறைவேற்றிப்பட்டது. இந்த சட்டமூலத்தின் உள்ள துரோகத்தனம் காரணமாக ஹிஸ்புல்லா கொண்டு வந்த பணம் குறித்து கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்த வங்கிக் கணக்கில் 36 ஆயிரத்து 298 ரூபாவே மீதம் இருப்பதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர். குறுகிய காலத்தில் 444 கோடி ரூபாய் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு விரும்பியவாறு பல்கலைக்கழகங்களை திறக்க முடியுமானால், இது நாடு அல்ல. ஜனவரி மாதம் எந்த வகையிலும் அதனை ஆரம்பிக்க விடமாட்டோம். நடந்துள்ள நிதி மோசடி சம்பந்தமாக நிச்சயம் ஹிஸ்புல்லா சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.