தாமதித்தாலும் தரமானவர்களை களமிறக்குவோம்.! -நளின் பண்டார

ஜனாதிபதி கனவுள்ள எத்தனையோ பேர் தமது கட்சியிலும் இருப்பதாகவும், கனவு காண்பது மாத்திரம் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான தகுதியாகாது எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருதுறையில் மாத்திரம் தேர்ச்சி பெற்றவர் ஜனாதிபதியாக வேண்டும் என எங்கும் சொல்லப்படவில்லை. எனவே அனைத்து துறைகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க கூடியவரையே நாம் களமிறக்குவோம்.

அது தொடர்பில் அவசரப்பட வேண்டியதில்லை, இன்னும் இரண்டு வாரங்கள் தள்ளிப்போனாலும் பிரச்சினையில்லை. எம்மிடம் இலகுவில் சந்தைப்படுத்த முடியுமான தரமான ஒரு பொருளே உள்ளது. அதனைப் புதிதாக தரப்படுத்த வேண்டியதில்லை.

அவ்வாறானவர்களை இறுதி சந்தர்ப்பத்தில் களமிறக்கினாலும் இலகுவாக விற்பனை செய்யலாம்  எனவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.